மொத்தம் சிக்கிய 10 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஹைலைட்ஸ்
- லடாக்கின் கர்தங் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது
- ஸ்கார்பியோ காரை பனிச்சரிவு தாக்கியுள்ளதாக தகவல்
- மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது
Leh, Ladakh: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பனிச்சரிவுக்குள் சிக்கியுள்ள மேலும் 5 பேரை மீட்க முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கர்தங்கில் இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் உயரத்தில் இருக்கும் சாலைகள் என்ற பெயர் இந்த இடத்திற்கு உண்டு.
பனிச்சரிவு ஏற்பட்டபோது சொகுசு கார் ஒன்று அதில் சிக்கிக் கொண்டது. அதில் 10 பேர் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் மீட்பு படையினர் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதில் மொத்தம் 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஸ்கார்பியோ காரானது மிகப்பெரும் பனிச் சுவற்றால் தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.