Heavy rain Alert - "இந்த ஆண்டு தமிழகத்தைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை நல்ல அளவில் பெய்துள்ளது"
Heavy rain Alert - தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடரும் என்றும், 5 மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மூலம் அடுத்து வரும் நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை நல்ல அளவில் பெய்துள்ளது. அதே நேரத்தில் சென்னை, வேலூர் மற்றும் புதுவையில் வழக்கமான அளவை விட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது. புதுவையில் அடுத்து வரும் நாட்களில் இந்த பற்றாக்குறை அதிகமாக குறையலாம். வேலூரில் வழக்கத்தைவிட 25 விழுக்காடு மழை குறைவாகவும், சென்னையில் வழக்கத்தைவிட 14 விழுக்காடு மழை குறைவாகவும் பெய்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் இறுதிவரை வடகிழக்குப் பருவமழைக் காலம் இருக்கும் என்பதால், மழை தொடரும்,” என்று தகவல் தெரிவித்துள்ளார்.