This Article is From Sep 08, 2018

அமெரிக்கர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட்: ம.பி.யில் மோசடி கும்பல் கைது

இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்க போலீசாரின் பெயரில் இ-மெயில் அனுப்பி பணம் பறித்த கில்லாடிகள்

அமெரிக்கர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட்: ம.பி.யில் மோசடி கும்பல் கைது
Chicago/Bhopal:

போபால்: இந்தியாவில் இருந்துக் கொண்டு கால் சென்டர் மோசடி மூலமாக அமெரிக்கர்களிடம் பணம் பறித்த கும்பலை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

போலி கால் சென்டர் நடத்தி மோசடிகள் நடப்பதாக மத்திய பிரதேச போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து பெடூல், விதிஷா மாவட்டங்களிலும் குஜராத்தின் அகமதாபாத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அபிஷேக் பதக் (22), ராம்பால் சிங் (29), திபேஷ்பாய் காந்தி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டே, அமெரிக்கர்களுக்கு அவர்கள் அரெஸ்ட் வாரன்ட் அனுப்பி பணத்தை பறித்த தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம்:

அமெரிக்காவில் வங்கியில் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் சிலர் காலம் தாழ்த்தி வருகின்றனர். அவர்கள் தொடர்பான விவரங்களை அந்நாட்டை சேர்ந்தவர்களிடம் இருந்து இந்த மோசடி கும்பல் பெற்றுள்ளது. பின்னர் கால் சென்டர் மூலமாக சம்பந்தப்பட்ட அமெரிக்கர்களுக்கு இ-மெயில் மூலமாக அரெஸ்ட் வாரன்டை அனுப்பியுள்ளது. இந்த மெயில்கள் அனைத்தும் அமெரிக்க போலீசார் அனுப்பியதை போன்று அனுப்பப் பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்கர்கள், இ மெயிலில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கும்பல், குறிப்பிட்ட தொகையை வங்கி மூலமாக செட்டில் செய்யும்படி மிரட்டியுள்ளது. கைதுக்கு பயந்த அவர்கள், மோசடி கும்பல் கேட்ட தொகையை அளித்துள்ளனர். இதனை அகமதாபாத்தை சேர்ந்த திபேஷ்பாய் காந்தி (25) என்பவர் கால் சென்டர் மோசடி மூலம் பெற்றுள்ளார்.

7 பேர் கொண்ட இந்த கும்பலுக்கு அபிஷேக் பதக் (22) தலைவராக இருந்துள்ளார். 12-ம் வகுப்பை பாதியில் நிறுத்திச் சென்ற இவர், அகமதாபாத்தில் உள்ள கால் சென்டரில் பணியாற்றியுள்ளார். அங்கு பதக்கும், அவரது கூட்டாளியான ராம்பால் சிங்கும் மோசடி செய்வது குறித்த நுணுக்கங்களை கற்றுள்ளனர்.

கைதானவர்களில் பர்கான் கான், சுபம் கீதா, சவுரப் ராஜ்புத், சரவன் குமார் ஆகியோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலிடம் இருந்து தற்போது வரை ரூ. 20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு மோசடி கும்பல் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் பிடிபட்டது.

.