டெல்லியின் அஷோக் விஹாரில் தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகின்றது
ஹைலைட்ஸ்
- டெல்லியின் வட மேற்கில் உள்ள அஷோக் விஹாரில் இந்த விபத்து நடந்துள்ளது
- 9:25-க்கு இது குறித்த தகவல் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
- 20 ஆண்டுகள் பழமையான அந்த கட்டடம் வலுவாக இல்லை, நகராட்சி அதிகாரி
New Delhi: டெல்லியின் வட மேற்கில் உள்ள அஷோக் விஹாரில் உள்ள 3 மாடி கட்டடம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் டீப் சந்த் பந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. விபத்து நடந்ததை அடுத்து, இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
விபத்தில் இறந்தப் பெண்ணின் பெயர் முன்னி என்று தெரியவந்துள்ளது.
கட்டடம் இடிந்தது குறித்து காலை 9:25 மணிக்கு தகவல் வந்தது. அதையடுத்து, உடனடியாக 6 தீயணைப்பு வண்டிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பினோம், என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுவும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, என்.டி.ஆர்.எஃப் தெரிவித்துள்ளது.
டெல்லி நகராட்சி அலுவலர் ஒருவர், இடிந்து விழுந்த கட்டடம் 20 ஆண்டுகள் பழமையானது. அதன் கட்டட அமைப்பு மிகவும் பலவீனமாக இருந்ததே விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.