This Article is From Jul 02, 2018

மகாராஷ்டிராவில் 5 பேர், கும்பலால் அடித்துக் கொலை!

மகாராஷ்டிராவில், குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 5 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிரா, ரெய்ன்பாடா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது
  • இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • 2 பேர் கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர்
Mumbai:

மகாராஷ்டிராவில், குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 5 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, துலே டவனில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பழங்குடியின மக்கள் வாழும் ரெய்ன்பாடா கிராமம். இந்த கிராமத்துக்கு 7 பேர் பேருந்து மூலம் வந்துள்ளனர். அவர்கள் 7 பேரும் கிராமத்திற்கு வேலை தேடி வந்தததாக கூறப்படுகிறது. கிராமத்திலிருந்து சந்தை பகுதிக்குச் சென்ற அவர்கள் அக்கம் பக்கத்தில் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் குழந்தை ஒன்றிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ஊர்காரர் ஒருவர், அவரை குழந்தை கடத்தல்காரர் என்று சந்தேகப்படுகிறார். இதையடுத்து, பலர் அவருடன் சேர்ந்து 7 பேரையும் சரமாரியாக தாக்குகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகின்றனர். 2 பேர் தப்பித்து விடுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த போலீஸ், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது. 15 பேர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளது போலீஸ். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஆண்களாகவே இருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டரவகள் மகாராஷ்டிர மாநிலத்தின் சொலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதைப் போன்ற ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. சென்னையில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இருவர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறது போலீஸ்.

சமூக வலைதளங்களில் ‘குழந்தை கடத்தல்காரர்கள்’ அதிகம் புழங்குவதாக பரவும் வதந்திகளால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களில் இதைப் போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

.