கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 145 பேரை கொரோனா பலி வாங்கியுள்ளது.
ஹைலைட்ஸ்
- திங்கள் முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது
- சென்னையில் இருந்து கோவை சென்ற 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
- விமானத்தில் சென்ற 51 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
Chennai: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த திங்கள் முதல், உள்நாட்டு விமானப்போக்குவரத்து இயங்கி வருகிறது.
இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், விமானப் போக்குவரத்தை இயக்குவது உகந்ததாக இருக்காது எனறு சில மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இருப்பினும், மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கி, நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் 51 பயணிகள் சேலத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திங்களன்று சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பயணிகளும், விமான பணியாளர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 639 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 145 பேரை கொரோனா பலி வாங்கியுள்ளது.