கஷோக்கியின் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய பத்திரிகையாளர் கஷோக்கி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர், அந்நாட்டு அரசை விமர்சித்து பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் எழுதி வந்தார். இதனால் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததை தொடர்ந்து சொந்த நாடான சவுதியில் இருந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது தனது காதலியை திருமணம் செய்வது தொடர்பான ஆவணங்களைப் பெற கசோக்கி துருக்கி நாட்டுக்கு சென்றிருந்தார். கடைசியாக அக்டோபர் 13-ம்தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்பூலில் உள்ள சவுதி தூதரகத்தில் அவர் காணப்பட்டார். அதன்பின்னர் அவர் எங்கிருக்கிறார், என்னவானார் என்பது குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை.
இதற்கிடையே, அவரை சவுதி இளவரசர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கொலை செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது. மர்மமான முறையில் இந்த கொலை நடந்திருந்ததால் உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஃப்ரன்ட்லைன் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கசோக்கியின் கொலை தனது கண்காணிப்பின்கீழ் நடந்ததாக சவுதி இளவரசர் சல்மான் கூறியிருந்தார்.
இந்தநிலையில், கஷோக்கியின் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்த வழக்கில் சவுதி இளவரசர் சல்மானின் முக்கிய உதவியாளர் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.