சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர்.
அரியானா மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய 5 வயது சிறுமி ஒருவர் நீண்ட மீட்பு போராட்டத்திற்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அவனை மீட்க தமிழக அரசே களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் அவனை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது துரதிருஷ்டமான விஷயமாகும்.
இந்த சோக சம்பவம் முடிவதற்கு முன்பாக, அரியானாவில் ஆழ்துளைக் கிணறு மரணம் ஒன்று நடந்திருக்கிறது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமம் உள்ளது. இங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நேற்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
சிறுமி மாயமானதால், பதைபதைத்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றுக்குள் அவர் சிக்கியது குறித்து தெரியவர, மீட்பு படைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்கட்டமாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. கேமராக்கள் மூலம் பார்த்ததில் சிறுமி 50 அடி ஆழத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. விடிய விடிய நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையின் முடிவில் சிறுமியை சடலமாகத்தான் மீட்க முடிந்தது.
முன்னதாக ஜூலை மாதத்தின்போது, 2 வயது சிறுவன் பதேவிர் சிங் என்பவர், 150 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கினார். பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுவன் சடலமாகத்தான் மீட்கப்பட்டான்.
2006-ல் அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் நடந்த இனனொரு சம்பவத்தில் 18 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தை விழுந்து 2 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றுக்கு விழுந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பெற்றோர் இதுபற்றி விழிப்புணர்வாக இருந்து அருகில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடினால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.