சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 கடன்: அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? டிடிவி தினகரன் கேள்வி
குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பு உண்மையா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர் உத்தரவுப்படி எளிமையாக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் கடன் யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையில் சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், காய்கறி மற்றும் பூ வியாபாரிகள் போன்ற சிறு கடைக்காரர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகலை மட்டும் வழங்கி 50,000 வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு குறைந்த வட்டியில் 350 நாட்கள் வரை தவணை முறையில் செலுத்தலாம் என அண்மையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.
அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. கரோனா துயரால் ஏற்கெனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.
அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ? என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, சிறுகுறுதொழில் செய்வோர் குடும்ப அட்டையுடன் வந்தால் ரூ.50,000 கடன் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.56 ஆயிரம் கோடி டெபாசிட் கூட்டுறவு வங்கிகளில் உள்ளது.
கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டையும், சிறு குறு வியாபாரிகளாக இருந்தால் போதும் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். வங்கியில் கடன் இல்லையென்று சொன்னால் எனக்கு வாட்ஸ் ஆப்பில் புகார் அளிக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.