Coronavirus: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- நாடுமுழுவதும், 1,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
- கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 பேர் உயிரிழப்பு
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடுமுழுவதும், 1,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து மட்டும் 151 குணமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, புதன்கிழமையன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்த வாரத்தில் அதிகபட்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மட்டும் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது, தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 86 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்தமாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 9 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், 39 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேபோல், டெல்லி மற்றும் ஆந்திராவிலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லியில் புதிதாக 55 பேருக்கும், ஆந்திராவில், 43 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீனில் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தப்லீக் ஜாமத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த மதக் கூட்டத்தில் கலந்துகொண்ட 130க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 9.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர், கிட்டதட்ட 50,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.