This Article is From Jun 16, 2020

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

50 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் சமூக நீதிக்கு எதிராகி விடும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisement
தமிழ்நாடு Posted by

ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Highlights

  • 50 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
  • 50 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் சமூக நீதிக்கு எதிராகி விடும்
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவு

மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொளிக் காட்சி மூலமாக விசாரணைக்கு வந்தது. 

Advertisement

அப்போது இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் கலந்தாய்வு நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், 50 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் சமூக நீதிக்கு எதிராகி விடும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் இந்த வழக்குகளில், மருத்துவப் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்படவில்லை என வாதிட்டார்.

Advertisement

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வரும் ஜூன் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். 

Advertisement