This Article is From Mar 23, 2020

தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

Coronavirus; தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • கொரோனாவால் ஒரு உயிரை கூட இழப்பதற்கு அரசு தயாராக இல்லை
  • அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்


தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. அதிகபட்சமாகக் கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கெனவே 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கலிபோர்னியாவிலிருந்து வந்த நபருக்கும், துபாயிலிருந்து வந்த நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பதிவில், வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அங்கிருந்து வெளியே வந்து சுற்றுவதாகத் தகவல்கள் வந்திருப்பதாகவும் அவ்வாறு சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். 

இதேபோல், கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்குத் தெரியப்படுத்தாவிடில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், வதந்திகளை பரப்புவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், கொரோனாவால் ஒரு உயிரைக் கூட இழப்பதற்கு அரசு தயாராக இல்லை என்றும், அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு ரூ.987 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 

.