தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்!
தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் இருவரும் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் அண்மையில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான விசாரணையைத் தடுக்க முயன்றதாக அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் உள்ளிட்டோரும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் பிரிவு எஸ்பி செஷாங் சாய் மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அடையாறு துணை ஆணையர் பகலவன் கரூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை உளவுப்பிரிவு எஸ்பி அரவிந்தன் திருவண்ணாமலை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் நிஷா சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கார்த்திக் சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா சென்னை சைபர் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இப்படி மாற்றப்பட்ட 33 அதிகாரிகளுடன் மேலும் 18 எஸ்பிக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.