தமிழகத்தில் புதிதாக 555 பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மொத்தம் 555 பேருந்துகளின் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 56 பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி.க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திற்கு 140, கும்பகோணத்திற்கு 102, விழுப்புரத்திற்கு 82 மதுரைக்கு 63 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒலிப்பெருக்கி, அகலப்படுத்தப்பட்ட படிக்கட்டுகள், மாற்றுத் திறனாளிக்கு இட வசதி, பயணிகள் இறங்கும் இடம் குறித்த தகவல்கள், அம்மா குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.