This Article is From Apr 11, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 58 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இதுவரை 9,527 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 58 பேர் பாதிப்பு!

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது, தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்திருக்கின்றது. சிறிது நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர், கொரோனா தொற்றால் இன்று புதியதாக 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  10 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 47,056 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். தமிழகம் கொரோனா தொற்று பாதிப்பில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் பாரத பிரதமர் முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையை நீட்டித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமரின் அறிவிப்பினை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பினை வெளியிடும். ரேபிட் டெஸ்ட் கருவி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, நம்மிடம் இன்னும் இந்த கருவி வந்து சேரவில்லை என்று சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.  நோயினை உறுதி செய்யக்கூடிய பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் நம்மிடம் போதுமான அளவு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழகத்தில் இதுவரை 9,527 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக மருத்துவக் குழு ஊரடங்கு உத்தரவினை மேலும் இரண்டு வாரக் காலம் நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்திருந்தது.

.