বাংলায় পড়ুন Read in English
This Article is From May 23, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா!

கடந்த நான்கு நாட்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா
New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 6,654 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த நான்கு நாட்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,720 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 13வது இடத்தில் உள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நான்காவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனையை சுகாதாரத்துறை கணிசமாக உயர்த்தியுள்ளது. மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு 1,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 100 மடங்கு இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டு நாளொன்று ஒரு லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 2,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் (சுமார் 65,000), அமெரிக்கா மற்றும் ஜெர்மனி (சுமார் 38,000) மற்றும் பிரான்ஸ் (சுமார் 21,000) என பாதிப்பு உள்ளது.
  • நாட்டில் கொரோனா தொற்றால் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் என இரண்டு மாநிலங்கள் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளன. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,940 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளனர்.  இதன் மூலமாக மகாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 44,000 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 14, 000 ஆக உயர்ந்துள்ளது.
  • தேசிய  தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12,319 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 660 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணக்கையானது ஒரே நாளில் 79லிருந்து 92 ஆக உயர்ந்துள்ளது.
  • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் விமான போக்குவரத்தினை இம்மாத இறுதி வரை தொடர வேண்டாம் என தமிழக அரசு மத்திய அரசினை கேட்டுக்கொண்டுள்ளது.
  • உள்நாட்டு விமான போக்குவரத்து மூலமாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணிகளை தனிமைப்படுத்த வேண்டாம்  என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், கர்நாடகா, கேரளா மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்கள் இப்போது விமானங்கள் மூலம் மாநிலத்திற்குள் நுழையும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை அறிவித்துள்ளன.
  • கொரோனா தொற்று தடுப்பு காலத்தில் விசா மற்றும் பயணங்களில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. அதனை தற்போது தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவது எளிதாக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • சர்வதேச அளவில் ஒரு லட்சம் மக்களுக்கு 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இந்த எண்ணிக்கையானது  7.9 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இறப்பு விதத்திலும் இந்தியா மாறுபட்டுள்ளது. உலக நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது 4.2 என்கிற விகிதத்தில் இருக்கையில் இந்தியாவில் இது 0.24 ஆக உள்ளது. கடந்த மார்ச் மாத்தில் மீட்பு விகிதம் நாடு முழுவதும் 7.1ஆக இருந்த நிலையில் தற்போது இந்த விகிதம் 40.31 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • சர்வதேச அளவில் 53 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் 3,40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் வரிசையில் முதலில் உள்ளது. நேற்று ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி பிரேசில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • சீனா தற்போது ஜனவரி மாதத்திலிருந்து முதல் முறையாக புதியதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என பதிவுசெய்துள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது.
Advertisement
Advertisement