நாடு முழுவதும் 3,800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: சர்வதேச அளவில் 196 நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 மில்லியனை கடந்துள்ள நிலையில், 3,39,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,31,868 ஆக உயர்ந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,767 பேர் தொற்றால் புதியாதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் 18,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக புதியதாக கண்டறியப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 6,000 அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,867 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கையானது சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஐந்து நாட்களில் இந்தியா புதிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளது. கடந்த திங்களன்று 5,242 பேர் பாதிக்கப்பட்டனர், பின்னர் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இதன் எண்ணிக்கை முறையே 5,611 மற்றும் 6,088 என உயர்ந்தது. இறுதியாக நேற்று 6,654 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர்.
- நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த அறிவிப்புக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சிவப்பு மண்டலங்களில் விமான போக்குவரத்து தொடங்கப்படுவது தவறான ஆலோசனை என மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களுக்கிடையில் விமான போக்குவரத்தினை இயக்குவதற்கான அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், மாநில அரசுகள் தங்கள் மாற்றுக் கருத்தினை பதிவு செய்து வருகின்றன. விமான பயணத்திற்கு பிறகு பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல டாக்ஸி போன்ற போக்குவரத்தினையே பெரிதும் நம்பியுள்ளனர்.
- நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 15 ஆயிரத்தினை கடந்துள்ளது. 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- இரண்டு மாத முழு முடக்க நடவடிக்கைக்கு பிறகு நாளை முதல் சென்னையில் 17 பெரு தொழிற்சாலைகள் தங்கள் பணிகளை தொடங்க மாநில அரசு அனுமதித்துள்ளது.
- கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா தனது பரிசோதனை விகிதத்தினை 100 மடங்கு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 1,000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கையானது நாளொன்றுக்கு ஒரு லட்சம் என உயர்ந்துள்ளது.
- அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்திற்குள் நுழைபவர்களுக்கு புதிய விதிமுறைகளை அம்மாநில சுகாதாரத்துறை விதித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
- கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதமானது தேசிய அளவில் 41.28 ஆக உள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இந்த விகிதமானது 51 ஆக உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு பொறுப்பான மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்திடுமாறும், அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளை மட்டுமே அளிக்குமாறும் மத்தியப் பிரதேச மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
- சர்வதேச அளவில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு 16 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- அமெரிக்காவையடுத்து பிரிட்டன் நாட்டில்2,57,154 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,675 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக இத்தாலியில் 2,29,327 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,735 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,35,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,678 பேர் உயிரிழந்துள்ளனர். பிரெஞ்சு நாட்டில், 1,82,469 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 28,332 பேர் உயிரிழந்துள்ளனர்.