This Article is From Dec 21, 2019

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒருமுறை கூட துப்பாக்கியால் சுடவில்லை என்று உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

இன்று உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துள்ளது.

Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையான இன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. 

இருப்பினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒருமுறை கூட துப்பாக்கியால் சுடவில்லை என்று மாநில காவல் துறை தலைவர், ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். 

காவல்துறை அளித்துள்ள தகவலின்படி, பீஜ்னோரில் 2 பேரும், சம்பல், பிரோசாபாத், மீரட், கான்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

தாங்கள் துப்பாக்கியால் ஏதும் சுடவில்லை என்றும், அப்படி சம்பவம் ஏதும் நடந்திருப்பின் அது போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து நேர்ந்திருக்கலாம் என்றும் இன்னொரு காவல் துறை அதிகாரி என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக்கு பின்னர் இன்று 13 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த இடங்களில், கலவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து தடியடி நடத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். 

முன்னதாக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்திருந்தனர். 

வங்கதேசம்,ஆப்கன், பாகிஸ்தான் நாடுகளில் இருந்துஇந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்தம் வகை செய்கிறது. இது அசாமில் 1985-ல் ஏற்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்வதாகவும், சட்ட ரீதியாக அசாமுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்வதாக கூறி போராட்டம் நடைபெறுகிறது.

மற்ற இடங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியுரிமை சட்ட திருத்தம் எதிரானது என்றும், மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி போராட்டங்கள் நடக்கின்றன. 

நேற்றும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து உத்தரபிரதேச காவல்துறை தலைவர் ஓ.பி. சிங், 'போராட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் வந்து வன்முறையில் ஈடுபட்டதாக எங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம். மொபைல் போன்கள், அழைப்புகள் உள்ளிட்டவை சோதனை செய்யப்படுகின்றன.' என்றார். 

.