This Article is From Nov 04, 2018

தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை: காவல்துறை எச்சரிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை: காவல்துறை எச்சரிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த அவகாசத்தை தளர்த்தக் கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளியின்போது, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு வெடிக்கப்படும் நேரத்தை தென் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்கப்படும் என்றும் அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிக அளவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.