கோவையில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
ஹைலைட்ஸ்
- 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
- 2 காவலர்களுக்கும் பிற்பகல் கொரோனா தொற்று
- தொடர்ந்து, ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
கோவையில் ஒரே நாளில் 3 பெண் காவலர்கள் உட்பட 6பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றை தினம் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதைத்தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணம் அடைந்து நேற்று மட்டும் 90 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது 908 பேருக்கு மட்டுமே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாக அதிகபட்சமாக சென்னையில் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதற்கடுத்த படியாகக் கோவை 134, திருப்பூர் 110, திண்டுக்கல் 80, ஈரோடு 70 ஆகியவை உள்ளன. தொடர்ந்து, ஈரோடு பெருந்துறையில் 29 பேரும், கோவையில் 27 பேரும், நெல்லையில் 55 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கோவையில் 3 பெண் காவலர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல்கள் வெளியானது.
கோவை மாநகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய கடந்த சில தினங்களாக சுகாதாரத் துறையினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று போத்தனூர், குனியமுத்தூர், ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவலர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும், 2 காவலர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது பிற்பகலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, போத்தனூரில் 4 காவலர்கள், குனியமுத்தூரில் ஒருவர், ஆயுதப்படை காவலர் ஒருவர் என 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. தற்காலிகமாக அந்த காவல் நிலையம் வேறு இடத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போத்தனூரில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், கோவை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதனிடையே, கோவை ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்ட உணவகமும் மூடப்பட்டுள்ளது.