"49 பேர் எழுதிய அந்த கடிதத்தில், அரசியல் சார்பும் தனிப்பட்ட முறையிலான நோக்கமும் இருந்தன."
New Delhi: மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் கலைஞர்களில் 49 பேர், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினர். கும்பல் வன்முறைகுக எதிராகவும், ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்கிற கோஷம் வன்முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியும் அந்த கடிதம் எழுதப்பட்டது. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில் அதற்குப் போட்டியாக அமையும் வகையில், 62 கலைஞர்கள் பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியுள்ளனர்.
சிபிஎப்சி-யின் தலைவரான பிரசூன் ஜோஷி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
“கடந்த ஜூலை 23 ஆம் தேதி, பிரமருக்கு எழுதிய கடிதம் ஒன்று எங்களை சினம் கொள்ளச் செய்தது. 49 பேர் எழுதிய அந்த கடிதத்தில், அரசியல் சார்பும் தனிப்பட்ட முறையிலான நோக்கமும் இருந்தன. இது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்மறையாக சித்தரிக்கும் என்று நினைக்கிறோம். இன்று கடிதம் எழுதுபவர்கள் முன்னர் நக்சல் அமைப்பினர், பழங்குடியினருக்கும் விளிம்புநிலை மனிதர்களைத் தாக்கியபோதும் அமைதியாக இருந்தனர். பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்தனர்” என்று 62 கலைஞர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 49 கலைஞர்கள் எழதிய கடிதத்தில், “டியர் பிரைம் மினிஸ்டர்… முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற சிறுபான்மையினர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியட்ட தகவல்படி, 2016 ஆம் ஆண்டு மட்டும் இதைப் போன்ற 840 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவை குறித்து சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. கும்பல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளி வர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்கிற கோஷம் தான் பல வன்முறைகளுக்குத் தூண்டுகோளாக இருந்து வருகிறது. மதத்தின் பெயரால் இத்தனை வன்முறைகள் நடப்பது வருத்தமளிக்கிறது. ராம் என்கிற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அப்படியிருக்க, அந்த பெயர் வன்முறைக்காக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ANI தகவல்களுடன் எழுதப்பட்டது