கோமா நிலையில் இருக்கும் த்ரிதி நாராயனன்
Washington: கடந்த திங்கட்கிழமை அன்று கோபண்டுமீ (GoFundMe) இணையத்தில், ஒரு 13 வயது பெண் மற்றும் அவரின் குடும்பத்திற்காக ஓர் இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு அதில் மருத்துவ செலவிற்காக 5,00,000 அமெரிக்க டாலர்கள் தேவை என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது வரை அந்த கணக்கில் 6,00,000 அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. யார் அந்தப் பெண்? அவருக்கு எப்படி விபத்து ஏற்பட்டது? எப்படி அவ்வளவு பணம் திரண்டது?
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் (Sunnyvale, California) என்ற இடத்தில் உள்ள ஒரு சாலையை த்ரிதி மற்றும் அவரது குடும்பம் கடக்கும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் விபத்து. அவர்களின் மொத்த குடும்பத்தின் மீது கார் ஏற்றப்பட்டது. விபத்தில், த்ரிதியின் தந்தை மற்றும் அண்ணன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஆனால் 7ஆம் வகுப்பு பயிலும் த்ரிதி நாராயனன் மட்டும், தலையில் பலத்த காயங்களுடன் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதன்பின் த்ரிதியின் மருத்துவ செலவிற்கு 5,00,000 அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என்ற நிலையில் பணத்திற்காக கோபண்டுமீ (GoFundMe) இணையத்தில் ஓர் இணையப் பக்கம் உருவாக்கப்பட்டது. அந்தப் பக்கத்தில், "நாங்கள் த்ரிதியின் குடும்பத்தினர். எங்களிடம் த்ரிதி பிழைத்துக்கொள்ள போதுமான வேண்டுதல்கள் இருந்தும், சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்ட மக்கள் த்ரிதியின் மருத்துவ செலவிற்காக தங்கள் பங்களிப்பை அளித்தனர். இதுவரை 12,360 அளித்த பணத்தில், 6,00,000 அமெரிக்க டாலர்கள் அந்த இணையத்தின் வாயிலாக ஈட்டப்பட்டது.
இதற்கிடையில், அந்த கொலையை செய்தவர்கள் த்ரிதி மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என எண்ணி இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களை 9 பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேன் ஜோஸ்ஸில் உள்ள நீதி மன்றத்தில் கடந்த மே 3 அன்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை மே 16 அன்றுக்கு ஒத்தி வைத்துள்ளார்.