This Article is From Mar 14, 2020

டெல்லியில் 61 எம்எல்ஏக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை!! NPRக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் 61 எம்எல்ஏக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை!! NPRக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம் டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • 70-ல் 61 உறுப்பினர்களிடத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லை
  • என்.பி.ஆருக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது
  • என்.பி.ஆர் பணிகள் மேற்கொள்ளப்படாது என்று தமிழக அரசு நேற்று தெரிவித்தது
New Delhi:

டெல்லி சட்டமன்றத்தில் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் 70 பேரில் 61 பேரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்பது தெரியவந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது-

என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. எனது குடும்பத்தினரிடமும் ஆவணங்கள் கிடையாது. 

நான், எனது மனைவி, எனது அமைச்சரவை உறுப்பினர்களிடத்திலும் குடியுரிமையை நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் கிடையாது. நாங்கள் எல்லோரும் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்படுவோமா?

இந்த என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள் யார் யாரிடமெல்லாம் பிறப்புச் சான்றிதழ் உள்ளதென வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 9 பேரிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் இருப்பது தெரியவந்தது. vhnf2ra

முஸ்லிம்களை என்.பி.ஆர்., என்.ஆர்.சி. குறி வைத்துள்ளதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது. தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க முடியாமல் போனால் தாங்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்படுவோம் என மக்கள் அச்சப்படுகின்றனர். நாட்டில் 90 சதவீதம் பேரிடம் மத்திய அரசு கேட்கும் சான்றிதழ்கள் கிடையாது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மாநிலங்களவையில் டெல்லி வன்முறை குறித்து விளக்கம் அளித்த அமித் ஷா, என்.பி.ஆர். நடவடிக்கையின்போது யாரிடமும் ஆவணங்கள் கேட்கப்பட மாட்டாது. விருப்பம் இருந்தால் அளிக்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம் என்று தெரிவித்திருந்தார்.

கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. 

பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பீகாரில் ஆட்சி செய்யும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் அதிமுக ஆகியவை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக என்.பி.ஆர். மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தற்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெற்றோர் பிறந்த இடம் போன்ற கேள்விகள்தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. 

வழக்கமாக வீடு, வீட்டின் எண், குடும்ப உறுப்பினர்கள், மின் மூலம், கழிவறை வசதி உள்ளதா இல்லையா, டாய்லெட்டின் அமைப்பு, கழிவுநீர் குழாய் அமைப்பு, குளியல் வசதிகள், சமையலறை வசதிகள், எரிவாயு உருளை இணைப்பு உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 

2020 என்.பி.ஆரில் கூடுதலாகப் பெற்றோர் பிறந்த இடம், தேதி, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, தாய்மொழி, தேசிய அடையாளம் உள்ளிட்ட 8 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

.