கடந்த திங்களன்று 43 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஹைலைட்ஸ்
- கொரோனா அறிகுறியை மறைத்து கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்ந்தார்
- நேற்றிரவு மூச்சுத் திணறி கர்ப்பிணி உயிரிழந்தார்
- 68 மருத்துவர்கள், செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
New Delhi: வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த விவரத்தை மறைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த 68 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
25 வயதான கர்ப்பிணி ஒருவர் வடக்கு டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் மருத்துவமனையில் திங்களன்று அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே வெளிநாடு சென்று வந்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் இந்த விவரத்தை தெரிவிக்கவில்லை.
மருத்துவர்களும், செவிலியர்களும் கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு கர்ப்பிணியின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான், கர்ப்பிணி உண்மைகளை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் கர்ப்பிணி உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 'உயிரிழந்தவர் ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியிருக்கிறார். அவரை சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திங்களன்று அவர் தவறான தகவல்களை அளித்து மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். உயிரிழக்கப்போகும் நிலையில்தான் உண்மையை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதன்படி பார்த்தால் உயிரிழந்த கர்ப்பிணியும், அவரது குடும்பத்தினரும் ஏப்ரல் 10 முதல் 24-ம்தேதி வரை தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த 68 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
உயிரிழந்த கர்ப்பிணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவு இன்னும் வரவில்லை.
கடந்த திங்களன்று 43 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் 90 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் 1,500-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.