Munnar: இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவால், ரிசார்ட்டில் சிக்கியிருந்த 69 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டுக்குப் போகும் பாதை முழுக்க நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு மாட்டியுள்ளவர்களை மீட்க இராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
“ரிசார்ட்டில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்க ஏதுவாக சாலையை சரிசெய்யும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகளும் இராணுவத்தினரும் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு அடிப்படையான விசயங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சில தூதரகங்களுடனும் துணை ஆட்சியர் தொடர்பில் உள்ளார்” என்று மீட்புப் பணிகள் குறித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் ஜீவன் குமார் முன்பு கூறி இருந்தார். தற்போது, 69 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
முழு கொள்ளளவை எட்டி வருவதால், இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செறுதோணி அணையில் உள்ள ஐந்து மதகுகளும் வியாழன் முதல் திறந்துவிடப்பட்டன. கேரளாவின் முக்கியச் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான இடுக்கியில்தான் ஆசியாவின் பெரிய வளைவு வடிவ அணைகளுள் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 26 ஆண்டுகளில் முதன்முறையாக தற்போது அதில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் இடுக்கி மாவட்ட நிலச்சரிவுகளில் இறந்தவர்கள் ஆவர்.
பாதுகாப்பாக இருக்குமாறு இடுக்கி மாவட்டம் முழுக்க ஒலிபெருக்கிகள் வாயிலாக உள்ளூர்வாசிகளுக்குப் பொது அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது. எனினும் அங்கு புதிதாக நிலச்சரிவு, வெள்ளம் ஏதும் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை.
மேலும் இடுக்கியில் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் சென்று வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. உள்துறை அமைச்சர் கேரள முதல்வர் பிணராயி விஜயனைத் தொடர்புகொண்டு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்கத் துணைத் தூதரகம் தனது நாட்டினருக்கு, வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதைத் தற்போதைக்குத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.
அதிகார்வபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுக்குப் பத்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வரும் மாநிலமாக கேரளா உள்ளது.