இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கே கொரோனா பாதிப்பு; சுகாதார அமைச்சகம் (File)
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கே கொரோனா பாதிப்பு
- இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோரமுகத்தைக் காட்டி வருகிறது
- ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு என்ற அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.
New Delhi: இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 7.1 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் விழிபிதுங்கி வருகின்றன. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோரமுகத்தைக் காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக்கொண்டு செல்கிறதே தவிர கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 7.1 ஒருவருக்கு என்ற அளவிலேயே கொரோனா பாதிப்பு உள்ளது. உலக அளவில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு என்ற அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.
அதாவது உலக அளவில் 45,25,497 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு பாதிப்பு என்ற அளவில் உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 431 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. கொரோனா பாதிப்பில் 3 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கும் ரஷ்யாவில், ஒரு லட்சம் பேரில் 195 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 2.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் ஒரு லட்சம் பேரில் 361 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் தீவிர நடவடிக்கைகள் சாதகமான பலன்களை காட்டத்தொடங்கியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)