தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவர் ஒருவர் பிணமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல எதிர்கட்சித் தலைவர்கள் மத்திய அரசினை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவரின் இறப்பு தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், மாணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தன்னுடைய வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் இதுபோன்ற விபரீத முடிவுகள் எடுப்பது தனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும், எனவே இவ்வாறான முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.