கேரளாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 364 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் 7 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கேரளாவில் 3வது பலி: புதுச்சேரியை சேர்ந்த 71 வயது முதியவர் உயிரிழப்பு
- அறிகுறி உள்ள 730 பேர் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- நேற்றைய தினம் மட்டும் 7 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thiruvananthapuram: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 71 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த அந்த முதியவர், திருவனந்தபுரத்தில் இருந்து 472 கி.மீ தொலைவில் உள்ள கன்னூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு இதயம், சிறுநீரக பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்ணூர் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் கே.நாராயணா நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அந்த முதியவர் ஏற்கனவே தலச்சேரியில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதன் பின்னர், பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்கும், மசூதியில் நடந்த சிறப்புத் தொழுகையிலும் பங்கேற்றதாகத் தெரிவித்தார். ஆனால் யாரிடமிருந்து முதியவருக்கு கொரோனா வைரஸ் பரவியது எனத் தெரியவில்லை.
இதுதொடர்பாக கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறும்போது, நேற்றைய தினம் மட்டும் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 364 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
மொத்தமாக கேரள மாநிலத்தில் 1,29,751 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில், 1,29,021 பேர் வீட்டிலும், 730 பேர் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.