கடந்த 3 நாட்களில் மட்டும் பெய்த கனமழையால், 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மிக கனமழை பெய்து வந்த நிலையில், இன்று மழையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பெய்த கனமழையால், 72 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றாண்டில் எதிர்கொண்ட மிக மோசமான இந்த வெள்ள பாதிப்பிலிருந்து கேரளம் இன்னும் மீளவில்லை.
வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, நேற்று முதல் தொகுதியிலே முகாமிட்டுள்ளார். தொடர்ந்து, இன்று அவர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டுகோள் விடுத்தார்.
இன்று முதல் ஆக.15 வரை 14 மாவட்டங்களில், எந்த ரெட் அலர்ட்டும் விடுக்கப்படவில்லை.
எனினும், காசர்கோட், கன்னூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று எச்சிரிக்கையுடன் இருக்க கூறும் - ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த ராகுல் காந்தி, தனது முகநூல் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "என்னுடைய வயநாடு மக்களவைத் தொகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவதால், அனைவரும் நிவாரண பொருட்கள் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அனைவரும் அளிக்கும் நிவாரணப் பொருட்கள் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சேகரிப்பு மையம் மூலம் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். அனைவரும் உதவுங்கள்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
மாநிலம் முழுவதும் சிக்கித் தவிக்கும் கிராமங்களுக்கு மீட்புப் படைகளை அமைத்து விமானம் மூலம் உணவுகளை வழங்க ராணுவ குழுக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். "பல வீடுகள் இன்னும் 10-12 அடி ஆழமான மண்ணின் கீழ் உள்ளன. இது மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது" என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களிடம் இருந்து பெறப்படும் வெள்ள நிவாரண தொகை, மீட்பு நடவடிக்கைகளுக்கும், ஏழை மக்களுக்கு உதவுவதற்குவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரன்வேயில் தண்ணீர் புகுந்ததால், கொச்சின் சர்வதேச விமான நிலையம் 2 நாட்களாக முடங்கியிருந்தது. தொடர்ந்து, நேற்று பிற்பகல் முதல் மீண்டும் இயங்கி வருகிறது.
கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து
வருகிறது.