This Article is From Dec 05, 2019

“8, 7, 6.6, 5.8, 5, 4.5 = இந்தியப் பொருளாதாரம்”- மத்திய அரசைச் சீண்டும் ப.சிதம்பரம்

P Chidambaram on economy: “வெளிவரும் ஒவ்வொரு தரவுகளும் பொருளாதார மந்தநிலையைச் சுட்டிக் காண்பிக்கின்றன"

P Chidambaram on economy: இந்த ஆண்டு இறுதியில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதம் இருந்தால், அதுவே அதிர்ஷ்டமாக இருக்கும்

New Delhi:

P Chidambaram on economy: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பிணையில் வெளிவந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை கறார் தொனியில் விமர்சித்துள்ளார். 

“இந்த அரசு நிறைய தவறுகளை செய்கிறது. நான் மீண்டும் சொல்கிறேன், இந்த தவறாக செயல்படுகிறது, அவர்கள் தவறாக செயல்படுவதற்குக் காரணம், என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை,” என்று செய்தியாளர்கள் மத்தியில் பேச ஆரம்பித்தார் சிதம்பரம்.

திகார் சிறையில் 106 நாட்கள் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு நேற்றுதான் ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது. 

தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்த்திப்பில், “வெளிவரும் ஒவ்வொரு தரவுகளும் பொருளாதார மந்தநிலையைச் சுட்டிக் காண்பிக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டுக் கொண்டு வர முடியும். ஆனால், இந்த அரசுக்கு அதற்கான திறன் இல்லை. இந்த ஆண்டு இறுதியில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதம் இருந்தால், அதுவே அதிர்ஷ்டமாக இருக்கும். பொருளாதார வல்லுநரானா அரவிந்த் சுப்ரமணியம், இந்த அரசின் கீழ் வளர்ச்சி 5 சதவிதத்துக்கு வீழும் என்று எச்சரித்தார். உண்மையில் அது 5 சதவிகிதம் அளவுக்குக் கூட இல்லை. 1.5 சதவிகிதம்தான்,” என்று விளக்கினார்.

முன்னதாக நாடாளுமன்றத்துக்குச் சென்ற சிதம்பரம், வெங்காய விலை உயர்வைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். “நாடாளுமன்றத்தில் எனது குரலை இந்த அரசால் அடக்க முடியாது,” என்றும் தீர்க்கமாக கருத்து தெரிவித்தார். 

நேற்று பிணையில் வெளியே வந்த சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர், “உச்ச நீதிமன்றம் எனக்குப் பிணை கொடுத்தது மகிழ்ச்சி. 106 நாட்களுக்குப் பின்னர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது மிகவும் சந்தோஷம்,” என்றார்.

சிதம்பரத்துக்குப் பிணை கொடுத்த உச்ச நீதிமன்றம், அவர், நாட்டை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, வழக்குத் தொடர்பாக சிதம்பரம், ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும், அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், சாட்சியங்களைத் தொடர்பு கொள்ள முயலக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

சிதம்பரத்தின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் 28-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்துக்குப் பிணை கொடுக்க மறுத்துவிட்டது. 

பிணை விசாரணையின்போது அமலாக்கத் துறை, “கஸ்டடியில் இருக்கும் போதும் சிதம்பரத்தால் வழக்கின் முக்கிய சாட்சியங்களிடம் தாக்கம் ஏற்படுத்த முடியும்,” என்று குற்றம் சாட்டியது. அதற்குச் சிதம்பரம், “ஆதராமற்ற வாதங்கள் மூலம் சமூகத்தில் எனக்கிருக்கும் நன்மதிப்பையும் பொது வாழ்க்கையையும் சிதைத்துவிட முடியாது,” என்றார். 

இறுதியாக அமலாக்கத் துறையின் வாதங்களை ஏற்காத உச்ச நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது.


 

.