This Article is From Aug 06, 2020

அகமதாபாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Ahmedabad Hospital Fire: இந்த தீ விபத்தால் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Ahmedabad Hospital Fire:அகமதாபாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Ahmedabad:

அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளித்து வந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தின் நவரங்புரா பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்க எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தீயணைப்புதுறையை சேர்ந்த 10 ஆம்புலான்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இந்த தீ விபத்தால் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த நேரத்தில் காயமடைந்த சுமார் 45 பேர் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், அகமதாபாத்தில் ஏற்பட்ட சோகமான மருத்துவமனை தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. 

இந்த விபத்தால் துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தின் நிலைமை குறித்து முதல்வர் விஜய் ருபானி மற்றும் மேயர் பட்டேலிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தில் இதுவரை 65,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும். இதுவரை அங்கு கொரோனா பாதிப்படைந்த 48,000 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். தொற்றுநோய் பாதிப்பு காரணமாக 39,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

(With inputs from PTI)

.