எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை நாட்டு கடற்படை கைது செய்துள்ளது.
ராமாநாதபுரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்துள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளார் தமிழக மீன்வளத் துறை அதிகாரி யுவராஜ்.
இது குறித்து யுவராஜ் மேலும் தெரிவிக்கையில், ‘மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, மோசமான வானிலை நிலவுவதால் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைப் பொறுட்படுத்தாமல், அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
8 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, அவர்களின் வலைகளையும் படகுகளையும் பிடித்து வைத்துள்ளது. மீனவர்கள் தற்போது இலங்கையில் கரைநகர் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
கடந்த சில மாதங்களாக, தமிழக மீனவர்கள் பலரை, எல்லைத் தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்தச் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தன. ஆனால், இப்போதுதான் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 3,000 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.