New Delhi: டெல்லியில் 8 வயது சிறுமி, தனது சகோதரனால் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்பட்டு அதிக அளவு ரத்தம் வெளியேறிய நிலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டதாக, மருத்துவமனையிடம் இருந்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மனநிலை ஆலோசகரிடம் அந்த சிறுமி, பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது அண்ணன் தான் இப்படி செய்ததாக கூறியுள்ளார், என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தபோது சிறுமி பாதிக்கப்பட்டதை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் சிறுமியின் பெற்றோர்.
18 வயதை பூர்த்தி செய்யாத அந்த சிறுவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். டெல்லி பெண்களுக்கான ஆணையம் என்ற அமைப்பின் தலைவர் ஸ்வாதி மலிவால் சிறுமியை சந்தித்து பேசினார். “ அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்” என்றார். மேலும், தங்கள் ஆணையம் இந்த சிறுமிக்கு மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
“ நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். “ என்றும் ஸ்வாதி தெரிவித்தார்.
டெல்லி காவல் துறையின் தகவல் படி டெல்லியில் தினமும் 2 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக வழக்கு பதியப்படுகிறது. ஏப்ரல் மாதம் வரை 282 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 278 வழக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 894 வழக்குகள் பதிவாகியிருப்பது, கவலைக்குறிய செய்தி.