Iran Attacks: இந்த திடீர் தாக்குதலில் ஜெர்மனி, டென்மார்க், நார்வே நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழக்கவில்லை என்று அந்தந்த நாடுகள் கூறியுள்ளன.
Dubai: Iran Attacks: ஈரான், புதன்கிழமையன்று அமெரிக்க ராணுவப் படையினர் இருந்த ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, காசெம் சுலைமானி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. சுமார் 15 ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஈரான் அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி, “ஈரான் தொடுத்த ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்கத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று பகீர் கிளப்பும் தகவலைத் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சி தரப்பு, அமெரிக்க அரசு தற்போது தொடுத்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நடவடிக்கை எடுத்தால் மேலும் 100 இடங்களுக்கு இலக்கு வைக்கப்படும் என்றும் அமெரிக்க அரசின் ஹெலிகாப்ட்டர்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலுக்கு ஆதாரமாக ஈரான் எதையும் இன்னும் வெளியிடவில்லை.
ஈராக் நேரப்படி, புதன்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தினர் இருந்த தளத்தில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க தரப்பு சொல்கிறது.
தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியிருந்தாலும் ஈரான், போர் வேண்டாம் என்றுதான் முடிவெடுத்துள்ளது என்று ஈரான் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஈரானின் முன்னாள் தளபதி சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்தான தகவல்கள் வந்தவுடன், இறுதிச்சடங்கில் இருந்த பலர் சந்தோஷத்துடன் ஆர்ப்பரித்துள்ளனர். அந்த காட்சிகளை ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அனைத்தும் நலமாகவே இருக்கிறது,” என்று ட்வீட்டியுள்ளார்.
அவர் மேலும், “ஆல் இஸ் வெல்! ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எல்லாம் நலமே! நம்மிடம்தான் இருப்பதிலேயே மிகச் சிறந்த ராணுவமும் ஆயுதங்களும் இருக்கின்றன. இது குறித்து நான் சீக்கிரமே அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடுவேன்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த திடீர் தாக்குதலில் ஜெர்மனி, டென்மார்க், நார்வே நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழக்கவில்லை என்று அந்தந்த நாடுகள் கூறியுள்ளன. ஈராக் தரப்பிலும் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஈரான் அரசு தரப்பு இத்தாகுதல் பற்றி, “எங்கள் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. மேலும் இறப்புகளைத் தடுக்க அமெரிக்க தரப்பு இப்பகுதியிலிருந்து தங்களது துருப்புகளை பின்வாங்கச் செய்ய வேண்டும்,” என்று தனது அதிகாரபூர்வ டிவி சேனல் மூலம் கூறியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)