தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழகர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்றைய தினம் நாட்டிலேயே முதன்முறையாக தனியார் துறையில் 75 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகைசெய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. அதாவது, அரசு தனியார் பங்களிப்பில் உருவாகும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திட்டங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 75% ஆந்திரப் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அந்த சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்துக்கு தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் கிடைக்கவில்லையென்றால் அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை அளிக்கவேண்டும். அதனால், தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் இல்லை என்று வாதம் செய்ய முடியாது. இந்த சட்டத்தின் மூலம், இந்தியாவிலேயே 75% வேலை வாய்ப்புகள் மாநில மக்களுக்கு உறுதி செய்த மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பாமக இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.
ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப்பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டுவிட்டன.
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெருநிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து விட்டனர். இப்போது ஆந்திராவில் ஆந்திரர்களுக்கே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தமிழர்களும் வேலை இழக்கக்கூடும்.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.