நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,15,942 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 1,14,073 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,642 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,887 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய தலைநகர் டெல்லியில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளது என டெல்லி அரசு கூறியுள்ளது. சமீபத்தில் படுக்கைகள் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகள் நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றன என எழுந்த குற்றச்சாட்டினை டெல்லி சுகாதாரத்துறை மறுத்துள்ளது.
டெல்லியில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள் பலர், மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
மத்திய அரசு வணிக வளாகங்கள், கோயில்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை திங்கட்கிழமை முதல் திறப்பதற்கு அனுமதியளித்திருந்தது. அத்துடன் அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருந்தது. கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றில் வெப்பநிலைமாணி கொண்டு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வணிக வளாகம், கோயில்கள், ஹோட்டல்கள் போன்றவை திறப்பதற்கு அனுமதியில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.