Read in English
This Article is From Jul 12, 2019

ரூ.93.5 லட்சம் பணம், 4 கிலோ தங்கம் - அதிரடி ரெய்டால் சிக்கிய தெலங்கானா தாசில்தார்!

தாசில்தார் லாவண்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்

Advertisement
Telangana Edited by
New Delhi:

தெலங்கானா(Telangana) மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் தாசில்தார் வி.லாவண்யா. அவரின் வீடு ஐதராபாத்தில் இருக்கும் ஹயாத்நகரில் உள்ளது. இந்த வீட்டில் அம்மாநிலத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய அதிரடி ரெய்டில், 93.5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வி.ஆர்.ஓ அந்தையா என்பவர், விவசாயி ஒருவரிடம் 4 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது சிக்கினார். இதைத் தொடர்ந்துதான் தாசில்தார் லாவண்யா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 

முன்னதாக விவசாயிடம் 8 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், அதில் 5 லட்ச ரூபாய் தாசில்தார் லாவண்யாவுக்குச் செல்லும் என்றும், 3 லட்ச ரூபாய் வி.ஆர்.ஓ-வுக்குச் செல்லும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. 

Advertisement

இதன்படிதான் வி.ஆர்.ஓ அனந்தையாவுக்கு, விவசாயி, 4 லட்ச ரூபாய் தொகையை முதலில் கொடுத்துள்ளார். தன் கைக்குப் பணம் வந்தவுடன், தாசில்தாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார் வி.ஆர்.ஓ. இந்த சமயத்தில்தான் இவ்விவகாரம் குறித்து மோப்பம் பிடித்துள்ளது ஊழல் தடுப்புப் பிரிவு.
 

இதைத் தொடர்ந்து தாசில்தார் லாவண்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள். அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் லாவண்யா. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில்தான் பணம், தங்கம் பறிமுல் செய்யப்பட்டன.

Advertisement

இது ஒரு புறமிருக்க, சில நாட்களுக்கு முன்னர் பாஸ்கர் என்கிற விவசாயி, தனது பிரச்னையைத் தீர்க்கக் கோரி தாசில்தார் லாவண்யா காலில் விழும்படியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விவசாயி பாஸ்கர், தனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் பிழை இருப்பதை பார்த்துள்ளார். இது குறித்து முறையிட்ட போதுதான், லஞ்சம் கேட்கப்பட்டதாம். இந்த சமயத்தில்தான் பாஸ்கர், ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் தெரிவித்துள்ளார். 
 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தெலங்கானாவின் சிறந்த தாசில்தார் என்ற விருதை, அம்மாநில அரசிடமிருந்து லாவண்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. லாவண்யாவின் கணவர், ஐதராபாத்தில் எஸ்.பி-யாக பணியாற்றி வருகிறார். 

Advertisement

Advertisement