This Article is From Apr 18, 2020

சென்னையில் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி!

முதியவர் அடக்கம் செய்யப்பட்டு 2 நாட்கள் கழித்து அவரின் மாதிரி ஆய்வு முடிவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது.

சென்னையில் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹைலைட்ஸ்

  • உயிரிழந்த 95 வயது முதியவருக்கு கொரோனா தொற்று
  • அதிகாரிகள் அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தினர்
  • அவர் வசித்த தெரு முழுதும் சீல் வைத்துள்ளனர்

சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 95 வயது முதியவர், உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, முதியவரின் ரத்த மாதிரியை சேகரித்த மருத்துவர்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

முதியவர் மறுநாள்சென்றபோது, கொரோனா பாதிப்புக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கூறவே, அவர்களது அறிவுறுத்தலின்படி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டார். 

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் அவர் முதலில் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் சிகிச்சை சான்றிதழை கேட்டு பெற்ற உறவினர்கள், முதியவரின் உடலையும் அடக்கம் செய்துவிட்டனர்.

இந்நிலையில், முதியவர் அடக்கம் செய்யப்பட்டு 2 நாட்கள் கழித்து அவரின் மாதிரி ஆய்வு முடிவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது. இதையடுத்து சுகாதாரத்துறையினர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

தொடரந்து, அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்திய அதிகாரிகள், அவர் வசித்த தெரு முழுதும் சீல் வைத்துள்ளனர். மேலும், முதியவர் உடலை ஆம்புலன்ஸில் கொண்டுச் சென்ற ஓட்டுனர், உதவியாளர், உடன் மயானத்துக்குச் சென்ற உறவினர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

.