முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் - 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக 9 ஆயிரத்து 300 காலி இடங்களுக்கான நடந்த இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.
தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்களில் பலர் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை புறக்கணித்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி சந்தேகம் ஏற்படுவதாக தேர்வர்கள் கூறினர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற 40 தேர்வர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, எதற்காக சொந்த மாவட்டங்களை விடுத்து குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் தேர்வு செய்தீர்கள்? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதிகாரிகளின் இந்த கேள்விகளுக்கு தேர்வர்கள் அனைவரும் ஒரே மாதிரி பதில் அளித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டு தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 39 தேர்வர்கள் வந்துள்ளதாவும், இவர்களுக்கு பதில் வேறு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன், 52 பேர் விடைத்தாளில் திருத்தம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.