உயர் நீதிமன்ற வளாகத்தில் அந்த மர்ம நபர், தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.
Chennai: சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி' என்று கூறி தன் மீது பதியப்பட்டிருந்த வழக்கிலிருந்து தப்பிக்கப்ப பார்த்திருக்கிறார் ஒரு மர்ம நபர். இது குறித்து விசாரித்த நீதிமன்றம், அவர் சொன்னது உண்மையில்லை என்பதை தெரிந்து கொண்டு சிறையில் அடைத்துள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் அந்த மர்ம நபர், தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தால் வழக்கறிஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸ் அவரிடம் விசாரணை செய்துள்ளது. அப்போதுதான், ‘நான் பிரதமர் அலுவலகத்தில் பணி செய்யும் அதிகாரி' என்று மிடுக்காக பேசியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு வழக்கறிஞரான வி.ஆனந்த், காவல் துறையில் புகார் செய்தார். அவர்தான், ‘விபத்து குறித்து கேள்வி கேட்டால் தனது பெயர் பிரசாத் என்றும், தான் பிரதமர் அலுவலக அதிகாரி என்றும் கூறுகிறார். மிகவும் முரணான பதில்களை அவர் தெரிவித்து வருகிறார். அவர் பயணித்த காரில், ‘விமான நிலைய அதிகாரி' என்றும் ‘இன்டர்போல்' என்றும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது' என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பிரசாத்திடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் போலீஸ் கூறுகையில், ‘ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை பிரசாத் நடத்தி வருகிறார். அவர் பிரதமர் அலுவலக அதிகாரி என்று பொய் சொல்லி இருக்கிறார். அவரிடம் பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறுவதற்கான போலி ஐடி கார்டும் இருந்தது. அவரை நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்பியுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளது.
பிரசாத்துடன் சேர்த்து அவரது காரை ஒட்டி வந்த ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.