திவாரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் இரண்டு போலீஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
Lucknow: லக்னோவில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ், காரில் சென்ற நபரை நிற்கச் சொல்லியுள்ளனர். அவர் காவலர்களின் பேச்சுக்கு செவி மடுக்காமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1:30 மணி அளவில் லக்னோவின் கோமதி நகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காரை ஓட்டிச் சென்றவர் விவேக் திவாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, ‘திவாரி இன்னொரு நபருடன் காரில் இருந்துள்ளார். அப்போது, ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள், காரிலிருந்து இறங்குமாறு திவாரியிடம் கேட்டுள்ளனார். அப்போது இரு சக்கர வாகனத்தில் காருக்கு அருகில் சென்ற போலீஸை திவாரி மோதியுள்ளார். தொடர்ந்து அவர் அருகிலிருந்த சுவரில் மோதி, தப்பிக்கப் பார்த்துள்ளார். அப்போது தான் போலீஸ் அவரை சுட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளது.
திவாரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் இரண்டு போலீஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து கான்ஸ்டபிள் பிரஷாந்த் குமார், ‘சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகத்திற்குறிய ஒரு கார் நின்றிருந்தது. அதற்கு அருகில் சென்று காரில் இருந்த இருவரையும் கீழே இறங்குமாறு தெரிவித்தோம். ஆனால், முறையான பதில் வரவில்லை. நிறுத்தியிருந்த எங்கள் பைக் மீது கார் இடித்தது. மீண்டும் அதைப் போலவே கார் வந்து பைக்கை இடித்தது. மூன்றாவது முறை என்னை நோக்கி கார் வந்த போது, வேறு வழியில்லாமல் கார் ஓட்டுநரை சுட்டேன்’ என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் திவாரியுடன் காரில் இருந்த நபர் போலீஸில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவர், ‘எங்கள் காரை பலவந்தமாக நிறுத்தப் பார்த்தனர் இருவர். திவாரி காரை நிறுத்தவில்லை. அந்த இடத்திலிருந்து விலகத்தான் அவர் முயன்றார். அவர்கள் யாரென்று கூட எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. நாங்கள் தெரியாமல் பைக்கை மோதிவிட்டோம். அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய நபர் லத்தியுடன் கார் அருகில் வந்தார். இன்னொருவர் துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ போலீஸ் அதிகாரி கலாநிதி நைதானி, ‘எங்கள் காவலர்கள் சந்தேகத்துக்குரிய ஒரு காருக்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது அந்த காரின் ஓட்டுநர் எங்களிடமிருந்து தப்பிக்கப் பார்த்தார். இதனால் தான் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியிருந்தது’ என்று கூறியுள்ளார்.