மோடியின் தொடக்க காலத்தில் இருந்து, அவர் பிரதமராக பதவியேற்ற வரையிலான வாழ்க்கை பயணத்தை இந்த திரைப்படம் மூலம் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.
Mumbai: பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையப்படுத்தி உருவான பயோ-பிக் திரைப்படம், மே 24 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் விவேக் ஓபராய் நடிப்பில் உருவான ‘பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்திற்கு பலகட்ட தடங்கல்கள் ஏற்பட்டன. தேர்தல் சமயத்தில் இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான மே 23 ஆம் தேதிக்கு அடுத்த நாள் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. அதே நாளன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. பல தரப்பும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சந்திப் சிங், ‘ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, இந்த நாட்டின் சட்டத்தை மதித்து நடந்து கொண்டோம். படத்தின் ரிலீஸ் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு, லோக்சபா தேர்தல் அறிவித்த அடுத்த நாள் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
மே 19 ஆம் தேதி வரை லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், எங்களுக்கு 4 நாட்கள் மட்டுமே படம் குறித்து விளம்பரப்படுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. மே 24 ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், இப்போது யாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நம்பகிறோம்' என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
மோடியின் தொடக்க காலத்தில் இருந்து, அவர் பிரதமராக பதவியேற்ற வரையிலான வாழ்க்கை பயணத்தை இந்த திரைப்படம் மூலம் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.