சாத்தூர் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலை சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள 10 அறைகளில் இன்று காலை வழக்கம் போல சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆலையில் மாலை 3 மணியளவில் வெடிகள் சேமித்து வைத்திருக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து வெகு விரைவில் மற்ற அறைகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்தில் இந்த ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறும், வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000; லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.