This Article is From Jul 30, 2019

வந்தார்… வென்றார்… சென்றார்… - போய்வாருங்கள் தீபாம்மா!

கட்சி… சாரி, பேரவை ஆரம்பித்த பின்னர்தான் தீபாவின் செயல்பாடுகள் வேற லெவலில் இருந்தன

வந்தார்… வென்றார்… சென்றார்… - போய்வாருங்கள் தீபாம்மா!

ரத்த சம்பந்தம் மற்றும் பார்க்க ஜெயலலிதா போலவே இருந்ததாலோ என்னவோ, அதிமுக-வினர் அவரிடம் ஆரம்பித்திலிருந்தே பவ்யமாக இருந்தனர். 

பிப்ரவரி 24, 2017… தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் வந்த அவரது முதல் பிறந்தநாள். தமிழக வரலாற்றில் அந்த நாள் இடம் பிடிக்க அது மட்டும் காரணமல்ல. தீபா தலைமையில் ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' உதயமான நாள் அன்று. சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என்று அஇஅதிமுக துண்டு துண்டாக சிதறிக் கொண்டிருந்த நிலையில், (அதன் பின்னர் டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று பரிணாம வளர்ச்சியடைந்தது வேறு கதை) வந்தார் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் என்ற அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. ரத்த சம்பந்தம் மற்றும் பார்க்க ஜெயலலிதா போலவே இருந்ததாலோ என்னவோ, அதிமுக-வினர் அவரிடம் ஆரம்பித்திலிருந்தே பவ்யமாக இருந்தனர்.  அதை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே தோன்றியது.

காரணம், 2017, பிப்ரவரி 7 ஆம் தேதி ஆழ்நிலை தியானத்துக்குச் சென்ற அந்நாள் முதல்வர், இந்நாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘தர்ம யுத்தத்தை' ஆரம்பித்தார். அதே மாதம் 24 ஆம் தேதி தீபா, கட்சி ஆரம்பித்த பின்னர், ஓ.பி.எஸ் மீதிருந்த ஊடக வெளிச்சம் தீபா பக்கம் திரும்பியது. ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ்-ஸும் தீபாவும் ஒன்றாக அரசியல் பயணத்தைத் தொடர வாய்ப்பிருந்ததாக பார்க்கப்பட்டது. தீபா தலைமையில்தான் அந்த பயணம் இருக்கும் என்று ஆருடம் சொல்லப்பட்டது. இதை புரிந்து கொண்டதாலோ என்னவோ, ஒரு முறை இருவரும் சேர்ந்து ஜெயலலிதா சமாதி இருக்கும் இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ஓ.பி.எஸ்-ஐ ஓரங்கட்டிவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார் தீபா. 

qnd14e9g

கட்சி… சாரி, பேரவை ஆரம்பித்த பின்னர்தான் தீபாவின் செயல்பாடுகள் வேற லெவலில் இருந்தன. பேரவையின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராஜா நீக்கம், பின்னர் கணவர் மாதவன் நீக்கம், பின்னர் ராஜா சேர்ப்பு, கணவர் மாதவன் மீண்டும் கட்சியில் இணைப்பு (இதற்கு நடுவில் மாதவன், ‘எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக' என்ற கட்சியை ஆரம்பித்தார். கட்சியின் ஒரே நோக்கம் ‘தீபாவை முதல்வர் ஆக்குவது'), போயஸ் கார்டன் சென்று சகோதரர் தீபக்கிடம் ஊடகங்கள் முன்னிலையில் ‘மேடிய தெரியாது உனக்கு' என்று கூப்பாடு போட்டது, அடுத்த முதல்வர் நான்தான் என்று பகிரங்க பிரகடனம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பு மனு ரத்து செய்யப்படும் அளவுக்கு விறு விறு வேலை என தொடர்ந்து சிக்ஸர் விளாசினார். எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக, நாடாளுமன்றத் தேர்தலின்போது, “அதிமுக-வுக்கு தீபா பேரவை ஆதரவு” என்று தானாக வந்து வண்டியில் ஏறினார்.

ரத்த உறவு என்று கூட பார்க்காமல் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் புறந்தள்ளின (வரலாறு உங்களை மன்னிக்காது தொண்டர்களே). தீபா தன்னை ஜெயலலிதாவாகவே உணர்ந்த தருணங்கள் இருக்கின்றன. செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பேரவை சார்பில் அழைப்பு கொடுப்பார். அனைத்து பத்திரிகை செய்தியாளர்களும், ‘உலகிற்கு இவர் ஏதோ சொல்ல வருகிறார்' என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பார்கள். காலையில் சென்றவர்களுக்கு தீபாவின் தரிசனம் மாலை வரை கிடைக்காது. சரி அதன் பின்னராவது கேட்கும் கேள்விகளுக்கு டக், டக்கென்று பதில் சொல்வார் என்று நினைத்தால், ‘அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்' என்று அப்பீட் ஆவார். 

8ltf1tjg

கடந்த 6 மாதங்களாவது தீபா, அரசியல் களத்தில் எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருக்கிறார். அதற்கு முன்னர், தானாக முன் வந்து பல விஷயங்கள் குறித்து ‘அதிரடி' கருத்துகளை உதிர்த்து பிரேக்கிங் செய்தி போட வைப்பார். ஆனால், எதாவது கேட்க வேண்டும் எனத் தொடர்பு கொண்டால், ‘எனக்கு பேச விருப்பமில்லை' என்பதை மட்டுமே பதிலாக சொல்வார். இப்படிப்பட்ட சூழலில்தான், “பேரவை என்ற ஒன்று இனி செயல்படாது. அதிமுக-வுடன் அதை எப்போதோ இணைத்துவிட்டேன். அரசியலில் இனி நான் செயல்படமாட்டேன. அதையும் மீறி யாராவது என்னை தொடர்பு கொண்டு துன்புறுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” என்று முகநூலில் பதிவிட்டு, சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் விட்டார். தற்போது அவர் அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை (அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை). தலைப்பில் வந்தார், வென்றார், சென்றார் என்று எழுதியிருப்போம். ஏன் வந்தார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை…

.