ஷாஜிலாவின் அந்தப் படத்தை பலர் முகநூல் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்த, ‘தைரியம் மற்றும் கடமையை கண்ணென செய்துள்ளார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளனர்
Pamba: சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 2 இள வயதுப் பெண்கள், சாமி தரிசனம் செய்தனர். ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்த பின்னர், முதன்முறையாக கோயிலுக்குள் சென்றது இந்த இரண்டு பெண்கள்தான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வலதுசாரி அமைப்புகள் திருவனந்தபுரத்தில் நடத்திய போராட்டத்தில், பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் கைரளி தொலைக்காட்சியைச் சேர்ந்த ஷாஜிலா அப்துல்ரஹ்மான். பல குண்டர்கள் ஷாஜிலாவை சூழ்ந்த கொண்டு தாக்கத் தொடங்கியதும், செய்வதறியாது அழத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில் கடமையைச் செய்யும் நோக்கில் தாக்கப்பட்ட போதும் வீடியோ எடுத்துள்ளார். ஷாஜிலா அழுதுக் கொண்டே வீடியோ எடுத்திருப்பது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து NDTV, ஷாஜிலாவிடம் பேசியது, “5, 6 பேர் என்னைப் பின்னால் இருந்த தாக்கினால், நான் என்ன செய்ய முடியும். நான் அழுதது பயத்தின் காரணமாக அல்ல. வீடியோ எடுக்க நிறைய விஷயங்கள் இருந்தும் அதை சரிவர எடுக்க முடியவில்லையே என்றுதான் கஷ்டப்பட்டேன். எனது வலியை மற்றவர்கள் அறியக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான், நான் கேமராவை வைத்து முகத்தை மூடிக் கொண்டேன்” என்று சம்பவத்தை விவரித்தார்.
ஷாஜிலாவின் அந்தப் படத்தை பலர் முகநூல் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்த, ‘தைரியம் மற்றும் கடமையை கண்ணென செய்துள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்றது குறித்து பினராயி விஜயன், ‘நேற்று ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், பக்தர்கள் அந்த இரு பெண்களுக்கும் உதவி செய்தனர். ஆனால், இதை வைத்து சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து வன்முறை செய்து வருகின்றனர்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.