This Article is From May 15, 2019

“பிள்ளைங்க நீட்-க்கு தயாரான மட்டும் போதுமா..?”- புதிய பாடத்திட்டம் ஓர் அலசல் #Exclusive

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்து செய்த பணியும், மேற்கொண்ட சீர்திருத்தங்களும் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது

“பிள்ளைங்க நீட்-க்கு தயாரான மட்டும் போதுமா..?”- புதிய பாடத்திட்டம் ஓர் அலசல் #Exclusive

புதிய பாடத் திட்டம் உருவாக உழைத்தவர்களில் முதன்மையானவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

தமிழக அரசுப் பள்ளிகளுக்கான புதிய பாடத் திட்டத்தின் கீழ், 1, 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு சென்ற ஆண்டு மே மாதம், புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் மீதம் இருக்கும் வகுப்புகளுக்குப் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய பாடத் திட்டம் உருவாக உழைத்தவர்களில் முதன்மையானவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தற்போது தொல்லியல் துறையில் அவர் பணியாற்றி வருகிறார்.

ஓராண்டு கடந்த பின்னர், அரசு தரப்பில், இந்த புதிய பாடத் திட்டம் குறித்து பல வித குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. ‘ஒரு மொழிப் பாடம் போதும்', ‘இரண்டு தாள்களுக்கு பதில் ஒரு தாள் தேர்வு எழுதினால் போதும்' என்று வரும் அறிவிப்புகளே இதற்கு சான்று. புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், “இன்னும் 5 ஆண்டுகளில் நமது மாநில மாணவர்கள் போட்டித் தேர்வுகளிக் ஜொலிப்பார்கள்” என்றார். 

o39atu2o

அவர் தொடர்ந்து இந்த புதிய பாடத் திட்டம் குறித்து சமீபத்தில் ஒரு செய்தித் தாளில் எழுதிய கட்டுரையில், “தமிழகத்தில் நீட் தேர்வு தாக்கம் பள்ளிப் பாடப் புத்தக சீர்திருத்தத்துக்கு வித்திட்டது. ஒரு பாடத் திட்டத்தை, போட்டித் தேர்வை முன் வைத்து மட்டும் உருவாக்க முடியாது என்றாலும், அதன் தேவைகளை புறந்தள்ளிவிட முடியாது. 

பொதுவாக, பள்ளிப் பாடப் புத்தகங்கள் என்பதுதான், அறிவைப் பெற உச்சபட்ச பொருளாக இருந்து வந்தது. ஆனால், இந்த புதிய பாடப் புத்தகங்கள் பழைமைகளை கைவிட்டுள்ளது. இன்ஃபோகிராஃப்ஸ், கான்செப்ட் மேப்ஸ், தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்த தரவுகள் உள்ளிட்டவை புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். 

தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் முந்தைய ஆண்டு தேர்வு வினா தாள்களும் புத்தகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட இந்த புத்தகங்களில் ஒரு முக்கியமான விஷயம் செய்ப்பட்டுள்ளது. ஒரு பாடத்தில் ஆர்வம் வர, அந்த பாடம் குறித்து முழுமையான அறிவைப் பெற இவை உறுதுணையாக இருக்கும். மாணவர்கள், துறை சார்ந்து எங்கு படிக்கலாம், குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் தேர்வாவதற்கான முறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் கூட இந்த புத்தகங்களில் இருக்கும்” என்று பூரித்து எழுதியிருந்தார். 

உதயசந்திரன், பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்து செய்த பணியும், மேற்கொண்ட சீர்திருத்தங்களும் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. பல ஆண்டுகளாக துரு பிடித்திருந்த பள்ளிப் பாடத் திட்டங்களை அவர் தூசி தட்டி மாற்றியமைத்தார். 

iheud4h8

ஆனால் அதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் குறித்துப் பேசுகிறார் கல்வித் துறை செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “முதலில் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். உதயசந்திரன் மற்றும் அவருடன் வேலை செய்த வல்லுநர்கள், பள்ளிப் பாடத் திட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்ததற்கு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். அவர்களுக்குத்தான் தெரியும், எத்தனை இடையூறு மற்றும் கஷ்டங்களுக்கு இடையில் இதைச் செய்தார்கள் என்று” என சொன்னவர் தொடர்ந்து, 

“நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும், இதர போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும், சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை விட அதிக முன்னேறிய விதத்தில் பாடத் திட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் மீது சுமையை அதிகரித்து விடக்கூடாது அல்லவா? 

On hand experience என்று சொல்லப்படும் அனுபவ முறை கல்விதான் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபத்தை வளர்க்கும். அதை விடுத்து முழுக்க முழுக்க தடிமனான புத்தகங்களை மட்டும் படிப்பதனால் பலன் இருக்குமா” என்று தன் நிலைப்பாடு குறித்து பேசினார். 

அவர் முடிவாக, “கல்வி என்றால் என்ன என்பது குறித்த புரிதல் இங்கிருக்கும் பெரும்பான்மையான கல்வியாளர்களுக்கு இல்லை. அல்லது, அது குறித்து தெரிந்தும் பேச மறுத்து வருகிறார்கள். இந்த நாட்டின் வளத்தை பாதுகாத்து, ஒரு சமூகமாக நாம் மேம்பட வேண்டியதை கல்வி சொல்லித் தர வேண்டும். 

இந்த நாடு என்பது என்ன. எல்லைகளில் இருக்கிறதா. அது மட்டும்தானா. மண்ணிற்கு அடியில் இருக்கும் வளங்கள் பற்றியும், அது எப்படி சுரண்டப்படுகிறது என்பதைப் பற்றியும் ஏன் நமது கல்வி சொல்லித் தருவதில்லை. 

eibgdsog

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் நமது நாட்டின் வளங்களை மற்றவர்கள் சுரண்டினர். அதை எதிர்த்துப் போராடித்தானே பல்லாயிரக்கணக்கானோர் உயிரை விட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு என்ன நடந்தது. பொது மக்கள் செலுத்தும் வரி மூலம், பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, வளங்கள் ஆக்கபூர்வமாக மாற்றப்பட்டன. மீண்டும் தனியார் துறை வந்து, நம் மண்ணின் வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. 

இது குறித்து கல்வி, சொல்லித் தர வேண்டாமா. நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதை சொல்லித் தருவது கல்வியின் கடமை அல்லவா. கல்வி மேம்பட்டால்தான், மாணவர்கள் மேம்படுவார்கள். மாணவர்கள் மேம்பட்டால்தான் மக்கள் மேம்படுவார்கள். மக்கள் மேம்பட்டால்தான் சமூகம் மேம்படும். நாடு என்பது சமூகம்தானே” என்றார் தீர்க்கமாக. 

பண்பட்ட சமூகத்துக்கான விதை பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறது. 


 

.