This Article is From Feb 29, 2020

'சாகித்ய அகாதெமி' விருது - எழுத்தாளர் ஜெயஸ்ரீயுடன் ஓர் கலந்துரையாடல்!

`நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்கிற மலையாள நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது

'சாகித்ய அகாதெமி' விருது - எழுத்தாளர் ஜெயஸ்ரீயுடன் ஓர் கலந்துரையாடல்!

சாகித்திய அகாதெமி விருது பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் படைப்பாளிகளில் தற்போது கே.வி. ஜெயஸ்ரீயும் ஒருவர். `நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்கிற மலையாள நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகளோடு அவருடன் கலந்துரையாடினோம். 

பெண் படைப்பாளிகளுக்கான வெளி எவ்வாறாக இருக்கிறது?

“தமிழ்ச் சூழல் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெண்கள் வாசிப்பது எழுதுவது என்பது குறைவாகத்தான் உள்ளது. அதிலும் இலக்கியத்துறை என்பது மிக அரிதானது. அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் நாம் கீழாகத்தான் இருக்கின்றோம். வாசிப்பே இல்லாத சூழல் நிலவுகிறது. வாசிப்பின் ருசி அறிந்துவிட்டால் எல்லா இடத்திற்கும் சென்று விடலாம். வாசிக்கும் தளத்திற்குப் பெண்களை நாம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவையுள்ளது. பொது வெளி இப்படியாக இருக்க, குடும்பச் சூழலில் இருவருமே எழுத்தாளர்களாக இருந்துவிட்டால், ஒரே துல்லியமான சுதந்திரத்தோடு பெண்களால் இயங்க முடிவதில்லை. குடும்பத்தில் ஆண்கள் மிக இயல்பாக தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள், இருவருக்குமான பொறுப்புகளை ஏற்றுக் குடும்பத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகே, எழுதுவதற்கான நேரம் கிடைக்கின்றது.

பெண்கள் படைப்பு வெளிக்கு மிகக் குறைவாகவும், பின்னாலும் இருப்பதற்கான காரணங்கள் மேற்குறிப்பிட்டவையாக இருக்கின்றது. மீறிப் படைப்பு தளத்திற்கு வரக்கூடிய பெண்களுக்குப் பின்னால் மிகப் பெரிய போராட்டங்கள் இருக்கின்றன.”

மொழிபெயர்ப்புகளில் உள்ள சிக்கல்கள் குறித்து...

“ 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' புத்தகம் மொழிபெயர்க்க எளிமையாக இருந்தது. காரணம், இதன் மூலப்பிரதியில் பயன்படுத்திய மொழி சங்க காலத்துத் தமிழ் மொழியாக இருந்ததனால்தான். மூலப் புத்தகத்தின் எழுத்தாளர் மனோஜ் வேறு நடையைக் கையாண்டிருந்தால் அதில் கொஞ்சம் மொழிபெயர்ப்பு சிரமம் இருந்திருக்கும். மொழிபெயர்ப்புகளில்  பொதுவான சிக்கல்களாக இருப்பதென்பது, வட்டார மொழிகள்தான். மலையாளத்திலேயே திருச்சூர் மொழியும், திருவனந்தபுரம் மொழியும், கோழிக்கோடு மொழியும் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறான வேறுபாடுகள் கொண்ட படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும்போது, அது தமிழகத்தில் எந்த பாணியிலான வட்டார மொழியில் அதனைப் படைப்பது என்பது பெரிய சிக்கலாக இருக்கும்.”

பொதுவாக இலக்கியப் படைப்புக்கள் அழகியலாக ஒரு பகுதியாகவும், யதார்த்தத்தினை மறுபகுதியாகவும் வகைமைப்படுத்துகின்றன. இதில் நீங்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள்?

“அழகியல் சார்ந்த படைப்புகளே முதன்மையானது என்று வைத்துக்கொண்டாலும் கூட, யதார்த்தத்தினை எழுதுவதும், அதை வாசிப்பதும் எனக்கு நெருக்கமானதாக நான் உணர்கின்றேன். அழகியலோடு உருவாகின்ற படைப்புகள் மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமே உள்ளதாக இருக்கும் பட்சத்தில், அது பொது மனிதனுக்கு ஒரு பாரமாகத்தான் இருக்கும். கலைத் தன்மையோடு சேர்த்து, சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாக உள்ளதாகவும் படைக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.”

இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாகப் படைப்பு வெளியில் இயங்கி வந்திருக்கக்கூடிய நீங்கள், தற்போது எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் குறித்த பொதுச் சமூகத்தின் கண்ணோட்டம் என்னவாக இருப்பதாகப் பார்க்கிறீர்கள்?

“கடந்த காலகட்டங்களில் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோர்கள் கடவுள்களாகப் பாவிக்கப்பட்டார்கள். பாமர மக்கள் மிக நிச்சயமாக இவர்களைப்போல எழுத முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த காலமது. ஆனால், சமீப காலங்களில் கிட்டதட்ட அனைவரும் எழுதத் தொடங்கிவிட்டனர். அழகியலைக் கடந்து யதார்த்தத்தினையும் படைப்பாக்க முடியும் என்று அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் புதியதாக எழுதத் தொடங்கினார்கள்.

படைப்பு வெளியில், சுயமாக எழுதுபவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடையே ஒரு தடுப்பு இருந்துகொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதுகள், அங்கீகாரங்கள் இல்லாமல் இருந்தன. ஆனால், சமீபத்திய 15 ஆண்டுகளில் அது மாறியிருக்கிறது. எழுத்தினை அனைவருக்கும் ஜனநாயகப்படுத்தியதில் பாரதிக்கு ஆகப்பெரிய பங்குண்டு. எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், அதற்கென ஒரு தார்மீக நேர்மையும், அழகியலும் இருக்க வேண்டும் என்பதை அவர்தான் தொடங்கி வைத்தார்.”

எழுத்து தளத்தில் நீங்கள் பயணிக்கக் காரணமான நபர் என்று யாரேனும் இருந்தார்களா?

“எங்களுடைய வளர் இளம் பருவத்தில் தற்போது இருக்கின்றதைப் போல் வெகுஜன ஊடகங்கள் கிடையாது. புத்தகங்களும், ரேடியோக்களும் மட்டுமே இருந்த காலமது. இந்த நிலையில், என்னுடைய அம்மாதான் எனக்கு வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்தியவள். அதற்கடுத்து கல்லூரி காலங்களில் நண்பர் பவா செல்லத்துரை, பிறகு அவர் அறிமுகப்படுத்திய பிரபஞ்சன். இப்படியாக எழுத்து சார்ந்து நான் பயணிக்கத் தொடங்கினேன். இலக்கியத்தினை பெரிதாக அறிமுகப்படுத்தியவர் பவா செல்லத்துரைதான். எழுத்தாளர் பிரபஞ்சன் இந்த நேரத்தில் இல்லையே என எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் தந்தையாக பார்த்த மனிதர்தான் பிரபஞ்சன். எழுவதற்கு ஊக்குவித்தவர் அவர். பேனா, நோட்டு உட்பட எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்தியவர். இந்த தருணத்தில் அவர் இல்லாதது பெரிய வருத்தமாக இருக்கிறது.”

                                                                                                                       -கார்த்தி.ரா

.