This Article is From Mar 10, 2019

லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் ‘மினி சட்டமன்றத் தேர்தல்’ அறிவிப்பு..!?

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்னும் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடக்கப் போகும் முதல் தேர்தல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகும்.

லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் ‘மினி சட்டமன்றத் தேர்தல்’ அறிவிப்பு..!?

கருணாநிதி இல்லாமல், முழுக்க முழுக்க ஸ்டாலின் தலைமையை நம்பி களமிறங்குகிறது திமுக

New Delhi/Chennai:

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்னும் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடக்கப் போகும் முதல் தேர்தல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக-வுக்கு அது மிகப் பெரும் சோதனையாக இருக்கும். காரணம், இடைத் தேர்தலில் 4 இடங்களை ஜெயிக்கவில்லை என்றால், அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் சூழலில் இருக்கிறது. 

கருணாநிதி இல்லாமல், முழுக்க முழுக்க ஸ்டாலின் தலைமையை நம்பி களமிறங்குகிறது திமுக. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் களத்தில் இருக்கும் டிடிவி தினகரனும் எதிர்வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர் அரசியல் கட்சித் தொடங்கிய கமல்ஹாசனும், லோக்சபா தேர்தலில் அதிகம் முனைப்பு காட்டி வருகிறார். 

q3306638

 

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினால், 18 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறித்தது தமிழக அரசு. அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் உயிரிழப்பால், 21 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதற்கிடையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம். 

இப்படிப்பட்ட சூழலில்தான் நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் தமிழகத்தில் தொற்றிக் கொண்டது. அதன் விளைவாக கூட்டணி காய் நகர்த்தல்கள் நடந்தன.

திமுக அணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அணி சேர்ந்தன. 

அதிமுக தரப்பில், பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டு சேர்ந்தன. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-வை தங்கள் வசம் இழுக்க அதிமுக அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

ஒரு பக்கம் தினகரன், சிறய கட்சிகளை அணி சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். 

இப்படி நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியே அனைத்து அரசியல் மூவ்களும் இருந்து வரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு 21 சட்டமன்றத் தேர்தல்களுக்கும் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அரசியல் காட்சிகள் வெகு விரைவாக மாறக்கூடும்.

.