This Article is From May 18, 2019

ஓ.பி.எஸ். மகனை எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் கைது!

ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் குமாரை எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓ.பி.எஸ். மகனை எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் கைது!

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, வரும் மே.23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்பியாகி விட்டதாக கல்வெட்டு வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவனும் போட்டியிட்டனர்.

இந்த 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை வரும் மே.23ம் நடைபெறகிறது, அன்றைய தினமே தேர்தல் முடிவுகளின் படி யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவரும்.

ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே எம்.பி ஆனது போல் கோவில் கல்வெட்டில் பெயர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

குச்சனூரில், உள்ள காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16ஆம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் அந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. இதில், ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், இடம்பெற்றது.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் அந்த கல்வெட்டின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, கோவில் கல்வெட்டில் இருந்து எம்.பி., என குறிப்பிடப்பட்ட ரவிந்தரநாத் பெயர் உடனடியாக மறைக்கப்பட்டது.

இந்நிலையில் கல்வெட்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இன்று காலை விளக்கம் அளித்தார். அதில், தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் கல்வெட்டில் எம்பி என்று பொறிக்கப்பட்டது தவறான செயல்.

கல்வெட்டில் எம்பி என குறிப்பிட்டது என பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி. கல்வெட்டு விவகாரம் நேற்றுதான் எனது கவனத்திற்கு வந்தது. கல்வெட்டில் எம்பி என குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரவீந்திரநாத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்.பி., என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் சின்னமனூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

.