ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது
New Delhi: சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர், ஷைலஜா விஜயன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘உச்ச நீதிமன்றத்தை இதற்கு முன்னர் அணுகியவர்கள், ஐயப்பனின் பக்தர்கள் அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, லடச்க்கணக்கான ஐயப்ப பக்தர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, மக்களின் குரலுக்கு முன்னால் நிலைக்காது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் தேவஸ்வம் போர்டு சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, சென்ற வாரம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் கேரளாவில் பேரணி நடத்தினர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாமல், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மாநில அரசுக்கு பேரணியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் கொண்ட ஒரு அமைப்பு, பெண்களைத் தடுப்பதற்காக சபரிமலை கோயிலுக்குச் செல்லும் வகையில், வழி மறிப்போம் என்று தெரிவித்துள்ளது.